நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 அக்டோபர், 2025

தமிழால் முடியும் : தமிழ் வளர்ச்சித்துறையின் சாதனை நிகழ்வு!

 

மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளின் அருளாசியுரை 

தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் 07.10.2025 முதல் 09.10.2025 வரை - மூன்று நாள் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி என்னும் பொருண்மையில் தமிழால் முடியும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நான்காவது நிகழ்வு இதுவாகும். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பெற்ற இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

தமிழக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டித் தேர்வுகளில் தமிழ், கணினித் தமிழ், ஊடகத்தமிழ் என்னும் முப்பெரும் பிரிவுகளில் தலைசிறந்த அறிஞர்கள் இருபத்து நான்கு பேரினை உரையாற்றச் செய்து, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துள்ள தமிழ் வளர்ச்சித்துறையும் அதன் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்களும் பாராட்டினுக்கும் வாழ்த்தினுக்கும் உரியவர்கள் ஆவர். அவர்தம் தலைமையில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறைகளின் இணை, துணை இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளின் துறைசார்ந்த ஈடுபாடும் ஒத்துழைப்பும் பாராட்டும் வண்ணம் இருந்தன.

 

தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் 
முனைவர் ஔவை. ந. அருள் அவர்களின் நோக்கவுரை

07.10.2025 காலை ஒன்பது மணியளவில் தொடங்கிய நிகழ்வில் மயிலம் சிறீமத் சிவாஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். சிவத்திரு. இராஜீவ்குமார் இராசேந்திரன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். மயிலம் பொம்மபுர ஆதீனம், இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையுரையாற்றி, இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை மக்களும் மாணவர்களும் பயன்படுத்திக்கொண்டு, உலகத்துக்கு ஈடுகொடுத்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்தி, ஆசி நல்கினார்கள்.

 

பங்கேற்ற மாணவர்களும் விருந்தினர்களும்

தமிழ் வளர்ச்சித்துறையின் மாண்புசால் இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அரியதோர் நோக்கவுரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறையின் பல்வேறு பணிகளை அவைக்கு நினைவூட்டிய இயக்குர் முனைவர் ந. அருள் அவர்கள், தலைசிறந்த தமிழ் வல்லுநர்களை இந்த நிகழ்வில் உரையாற்றுவற்கு அழைத்துள்ள பாங்கினை அழகுதமிழில் எடுத்துரைத்தார். மாணவர்கள் இந்த நிகழ்வினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுதல் வேண்டும் என்ற வாழ்த்துரையோடு தம் உரையை நிறைவுசெய்தார். 

முதல் உரையாளராகப் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியைச் சார்ந்த திருவாட்டி வேதவள்ளி செகதீசன் அவர்கள் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் என்ற தலைப்பில் அரியதோர் தன்னம்பிக்கை உரையாற்றி, மாணவர்களின் உள்ளத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தினார். 

பேராசிரியர் ஞான. செல்வகணபதி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா குறித்து உரையாற்றினார். முனைவர் சே. கரும்பாயிரம் அவர்கள் போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தமிழ் அறநூல்கள் குறித்து அரியதோர் உரையாற்றினார். தமிழும் ஊடகமும் என்ற தலைப்பில் நியூசு 7 தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் மோகன்ராசு பழனி அவர்கள் மாணவர்களின் உள்ளங்கொள்ளும் வகையில் சிறப்பாக உரை வழங்கினார். பேராசிரியர் துரை. மணிகண்டன் அவர்கள் தமிழ் எழுத்துருக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழுப்புரம் பேராசிரியர் கோ. குணசேகர் அவர்கள் தமிழக வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியப் பரப்பை மாணவர்களுக்கு நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் உ. சிவசுப்பிரமணியன் அவர்கள் ஊடகங்களில் தமிழ் என்னும் தலைப்பில் ஊடகங்களின் முக்கியத்துவத்தை அவைக்கு நினைவூட்டினார். 

முனைவர் மு.இளங்கோவன் கணினித் தமிழ் என்ற தலைப்பில் உலகில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படும் தமிழ் நூலகங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

பங்கேற்புச் சான்றிதழ் பெறும் முனைவர் மு.இளங்கோவன் 

08.10.2025 இல் நடைபெற்ற காலை அமர்வில் பல்துறையில் இணையத்தின் பயன்பாடு என்னும் தலைப்பில் பேராசிரியர் உரு. அசோகன் அவர்கள் உரையாற்றி, மாணவர்களுக்குப் பயனுடைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். திருவாளர் இனிய கண்ணன் அவர்கள் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் குறித்து உரையாற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி. செந்தில்வேல் அவர்கள் திரை ஊடகங்கள் குறித்து உரையாற்றினார். பேராசிரியர் சு. சதாசிவம் அவர்கள் தமிழ்ச்செயலிகள் குறித்த உரையை வழங்கினார். பேராசிரியர் ப. தாமரைக்கண்ணன் அவர்கள் சங்க இலக்கியங்கள் குறித்த அரியதோர் உரையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கினார். முனைவர் இரா. வள்ளி அவர்கள் விளம்பர ஊடகம் என்னும் தலைப்பில் உரை வழங்கினார். பேராசிரியர் ஆ. மணி அவர்கள் இணையத்தில் தமிழ் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

09.10.2025 இல் நடைபெற்ற காலை அமர்வில் திருவாளர் சு. இராமகிருட்டினன் அவர்கள் இக்கால இலக்கியங்கள் குறித்து அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மூத்த ஊடகவியலாளர் நீரை. மகேந்திரன் அவர்கள் தமிழ் மின் இதழ்கள் குறித்து உரை வழங்கினார். தமிழ் விசைப்பலகைகள், எழுத்துருக்கள் தொடர்பாக நீச்சல்காரன் அவர்கள் அரியதோர் உரை வழங்கினார். பேராசிரியர் சொ. ஏழுமலை அவர்கள் தமிழ் மொழி வரலாறு குறித்து உரை வழங்கினார். சமூக ஊடகங்கள் குறித்து கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மரபுத் தொடர்கள் – ஒற்றுப்பிழைகள் குறித்து முனைவர் கலை. செழியன் அவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். 

பேராசிரியர் அ. சதீஷ் அவர்கள் உலகத் தமிழர்களை இணைக்கும் உன்னத கருவியே கணினி என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். நாட்டுப்புறவியல் குறித்து செல்வி ஜெ. மீனாட்சி அவர்கள் உரை வழங்கினார். 

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து தேர்ந்தெடுத்து, அழைக்கப்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சியின் வழியாகத் தன்னம்பிக்கை பெற்றுத் தமிழால் முடியும் என்ற எண்ணத்துடன் விடைபெற்றனர். அரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்கள் யாவும் தாய்மொழியாம் தமிழில் வழங்கப்பட்டதால் மாணவர்கள் பல்துறை அறிவுபெற்றவர்களாக விடைபெற்றனர். தமிழால் முடியும் என்ற முழக்கத்துடன் நடைபெறும் தமிழ் வளர்ச்சித்துறையின் இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுதல் வேண்டும் என்பது எம் எதிர்பார்ப்பு.

புதன், 8 அக்டோபர், 2025

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப்போட்டி 2025-2026



 

  நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாகக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப்பணியாற்றி வருகின்றது. மாணவர்தம் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தெடுக்கும் வகையில் போட்டிகளை முறைப்படி நடத்தி, வெற்றிபெறுபவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்கின்றது. புலவர் தேர்வு எழுதுபவர்களுக்கு மாலைநேரக் கல்லூரியை நடத்தியது. திங்கள்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்திக் கருத்து விருந்து தருகின்றது. ஆண்டுதோறும் ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகின்றது. 

  நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் மாணவர்தம் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கில் கடந்த ஐம்பத்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப்போட்டியை நடத்தி வருகின்றது முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்தை உருவாக்கும் மாணவமணிக்கு எழுபதாயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கமும் அவர் பயிலும் கல்லூரிக்கு முப்பதாயிரம் மதிப்புடைய த. பி. சொ. அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் வழங்க உள்ளனர். 

இவ்வாண்டுக்குரிய ஆய்வுப்பொருள்: 

பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் எழுத்தோவியங்கள் 

1. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

2.  எழுத்தோவியம் அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும் எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் அமைதல் வேண்டும். ஆய்வு மேற்கோள், நூற்பட்டியல் இறுதியில் இடம்பெற வேண்டும்.

3. ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, உரை. இலக்கியம், இணையம் ஆகிய பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக் குறித்து விரிவாக ஆராய்வது விரும்பத்தக்கது.

4.  ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதிமொழியினை அவர் பயிலும் கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப்பேராசிரியர்களின் கையொப்பத்துடன் அனுப்புதல் வேண்டும்.

5.   ஆராய்ச்சிக்கட்டுரை வந்து சேர்வதற்குரிய இறுதி நாள்: 31.12.2025 

கட்டுரையை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: 

முனைவர் பால் வளன் அரசு,

தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம்,

3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை

திருநெல்வேலி – 627 002

கைபேசி: 7598399967 

முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள்: 

1.            மாணவராற்றுப்படை (1990)

2.            பனசைக்குயில் கூவுகிறது (1991)

3.            அச்சக ஆற்றுப்படை (1992)

4.            மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)

5.            பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)

6.            இலக்கியம் அன்றும் இன்றும் (1997)

7.            மணல்மேட்டு மழலைகள் (1997)

8.            வாய்மொழிப் பாடல்கள் (2001)

9.            பாரதிதாசன் பரம்பரை (2001)

10.          பழையன புகுதலும் (2002)

11.          அரங்கேறும் சிலம்புகள்(2002)

12.          பொன்னி பாரதிதாசன் பரம்பரை (2003)

13.          நாட்டுப்புறவியல் (2006)

14.          அயலகத் தமிழறிஞர்கள் (2009)

15.          கட்டுரைக் களஞ்சியம்(2013)

16.          செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்(2013)

17.          நாட்டுப்புறக் கலைகள் (சிங்கப்பூர், பல்கலைக்கழகப் பாடநூல்) 2018

18.          தொல்லிசையும் கல்லிசையும் (2019)

19.          இசைத்தமிழ்க் கலைஞர்கள் (2022)

20.          இணையம் கற்போம் (2023, செம்பதிப்பு)

21.          இணைய ஆற்றுப்படை (2024)

22.          தொடரும் தொல்காப்பிய மரபு(2024)

23.         தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்

               (கோலாலம்பூர்) (2025 ) 

பதிப்பாசிரியர்

1.            விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்(1995)

2.            பொன்னி ஆசிரியவுரைகள் (2004)

3.            உலகத் தமிழ் இணைய மாநாட்டு மலர் (2014), வெளியீட்டாளர்

4.            திருக்குறள் மொழிபெயர்ப்பு (2016)

5.            தமிழச்சி காமாட்சி துரைராசு பொன்விழா மலர் (2020)

6.            மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும்கருத்தரங்க மலர்(2021) 

முனைவர் மு.இளங்கோவனின் வலைப்பதிவு:

http://muelangovan.blogspot.com/ 

முனைவர் மு.இளங்கோவனின் யுடியூப் முகவரி:

https://www.youtube.com/@Vayalvelithiraikkalam/featured 

முனைவர் மு. இளங்கோவன் மின்னஞ்சல் முகவரி: muetamil@gmail.com