நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 18 ஜூலை, 2026

தமிழாகரர் தெ. முருகசாமியாரின் நல்வாழ்த்து!

 



  தொல் புதையல் என்னும் பெயரில் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் (சூலைசெப்டம்பர் 2026)  இதழில் என் நேர்காணல் 14 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதனைக் கண்ணுற்ற மூத்த தமிழறிஞரும் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வருமான தமிழாகரர் தெ. முருகசாமி ஐயா என் முயற்சியைப் பாராட்டிச் சில வெண்பாக்களை மடல்வழி விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்கள். மரபுப் பாக்கள் புனைவோர் அருகிவரும் வேளையில் இவ்வெண்பாக்களை நண்பர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்

தொல்புதையல் நல்லிதழில் தங்களின் நேர்காணல்

பல்சுவைப் பாங்காகப் பார்த்திட்டேன்! – நல்ல

இளம்அறிஞர் என்னும் எடுப்பான பேரை

வளமாகக் கண்டேன் அதில்


அன்னாய் இவனோர் இளமாணாக் கன்என்றே

சொன்ன குறுந்தொகைச் சொற்களின்பொன்னன்ன

வான்வரிச் சான்றாய் வளர்ந்துள்ள தங்களைத்

தான்அறிவேன் நன்றாக நான்


கோணல்நற் கோணலென வாழ்வைப்பா ழாக்குகிற

சாணேறி அந்தோ சறுக்கிடும்மாணா

இளைஞர்கள் சுட்டி இனிதாகக் கற்க

இளங்கோவே நல்லெடுத்துக் காட்டு


எத்தனை எத்தனை ஆன்ற அருஞ்செயல்கள்!

அத்தனை தானும் அருமையெனஇத்தரை

உள்ளோர் உணர உழைப்பினது சின்னமாய்

உள்ளஇளங் கோவிற்கென் வாழ்த்து

15.07.2026

திங்கள், 13 ஜூலை, 2026

தமிழியல் ஆய்வில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழ்க்கொடை – நினைவுக் கருத்தரங்கம்

 


 

 திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழ்க்கொடை என்னும் தலைப்பில்  நினைவுக் கருத்தரங்கம் 12. 07. 2026 காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை  நடைபெற்றது. முனைவர் இரா. இளவரசு அறக்கட்டளையும், புரட்சிப் பாவேந்தர் பேரவையும், பாவாணர் தமிழியக்கமும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

 கோ. மணிவாசகம் இ. வ. ப. அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னை இயக்குநர் முனைவர் ச. நாகராசன் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். புரட்சிப் பாவேந்தர் பேரவையின் தலைவர் பாவலர் குறள்மொழி தொடக்கவுரையாற்றினார். 

 தஞ்சைப் பேராசிரியர் முனைவர் மு. இளமுருகன் அவர்கள் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் இயக்கச் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் பா. மதிவாணன் அவர்கள் முனைவர் இரா. இளவரசு அவர்களின் படைப்பிலக்கியப் பங்களிப்பு என்ற தலைப்பிலும், புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழியல் ஆய்வுப் பங்களிப்பு என்னும் தலைப்பிலும் உரைநிகழ்த்தினர். 

 முனைவர் சு. செயலாபதி அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் முனைவர் பி. தமிழகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

 இந்த நிகழ்வில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழியல் ஆய்வுப் பங்களிப்பை நினைவுகூர்ந்த மு. இளங்கோவனாகிய நான், தமிழ்க் காப்பியங்களுள் காப்பிய வளம் செறிந்த பெருங்கதையை  (Descriptive Grammar of Perunkatai)  ஆய்ந்து அதன் மொழியமைப்பை  வெளியுலகுக்கு வெளிப்படுத்தி, முனைவர் பட்டம் பெற்றவர் இரா. இளவரசு என்று அவைக்கு நினைவூட்டினேன். கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு முனைவர் இரா. இளவரசு அவர்களால் எழுதப்பெற்ற இந்த ஆய்வேடு, 388 பக்கம் கொண்டது எனவும் பெருங்கதையின் சொல்லடைவு 1031 பக்கம் கொண்டது எனவும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது எனவும் அவைக்கு நினைவூட்டி, இதனை அச்சிட்டு வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன். 

 பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் முழுமையாக வெளிக்கொண்டுவந்த பெருமை பேராசிரியர் இரா. இளவரசு அவர்களுக்கு உண்டு எனக் குறிப்பிட்டேன். பாரதிதாசன் உலக நோக்குடையவர் என்பதை ஆய்வு உலகுக்குத் தம் ஆராய்ச்சி நூல் வழியாக மெய்ப்பித்தவர் இரா. இளவரசு என்றும் கூறினேன். அதுபோல் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பாடல் எழுதியவர் பாரதிதாசன் என்பதை இரா இளவரசு  ஆராய்ந்து, “இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்” என்று நூல் எழுதியவர் என்றும் குறிப்பிட்டேன். பாரதிதாசன் பல்வேறு இதழ்களில் - மலர்களில் எழுதி, இதுவரை நூல்வடிவம் பெறாத 353 பாடல்களையும், 337 கட்டுரைகளையும் நூல்களாக வெளியிட்ட பெருமையும் இரா. இளவரசு அவர்களைச் சாரும் என்று குறிப்பிட்டேன். தமிழ்மண் பதிப்பகம் வழியாக வெளிவந்த பாவேந்தரின் ஒட்டுமொத்த நூல்களின் தொகுப்பான பாவேந்தம் (இந்த நூல் 1534 தலைப்புகளில் 7,854 பக்கங்களைக் கொண்டு, 25 தொகுதிகளாக வெளிவந்தது) நூலின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டவர் இரா. இளவரசு என்று புகழாரம் சூட்டினேன். 


 திருச்சிராப்பள்ளி, தஞ்சையைச் சார்ந்த அறிஞர்கள் பாவலர்கள், இரா. இளவரசு அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நன்றி: தினமணி நாளிதழ், திருச்சி 13.06.2026